திருப்பூரில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையில் அடிக்கடி பழுது வாடிக்கையாளர்கள் சிரமம்
திருப்பூரில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர பகுதியில் சமீபகாலமாக பி.எஸ்.என்.எல். இணையதள சேவையில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இணையதள சேவையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை அடிக்கடி பழுது ஏற்பட்டு அதன் வாடிக்கையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே இணையதளம் வழியாக வேலை செய்து வருகிறார்கள். இந்த காலத்தில் இணையதளம் என்பது மிகவும் முக்கியமாக மாறிவிட்டது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் இணையதள சேவையில் பழுது ஏற்படுவதால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்கள். இதுகுறித்து அலுவலகத்தில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும் உடனடியாக பழுது நீக்கம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
விரைந்து சீரமைக்க வேண்டும்
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் பழுதுகளை சரி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஊழியர்கள் வீட்டுக்கே வந்து சரி செய்தாலும் கூட மீண்டும் பழுது ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புலம்பி தவிக்கிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் தங்கள் இணைப்பை ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அலுவலக உயர் அதிகாரியிடம் கேட்டதற்கு, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் போதுமான அளவு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால் பழுதுகளை முடிந்தவரை விரைந்து சரிப்படுத்தி வருகிறோம். இணையதள சேவை பழுது நீக்குவதற்கு உடனடி ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு இணையதள சேவை முக்கியம் என்பதை அறிந்து பழுதுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story