குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி 1-வது மண்டல அலுவலகம் முற்றுகை மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு


குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி  1-வது மண்டல அலுவலகம் முற்றுகை  மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 10:56 AM IST (Updated: 9 Jun 2020 10:56 AM IST)
t-max-icont-min-icon

அனுப்பர்பாளையத்தில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி 1-வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் மாநகராட்சி 1, 5, 6, 12-வது வார்டுகளுக்குட்பட்ட தண்ணீர்பந்தல், அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம்புதூர், பெரியார்காலனி, 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள 24 மணி நேர பொதுக்குழாய்களில் முதலாம் திட்ட குடிநீரும், வீடுகளுக்கு 2 மற்றும் 3-வது திட்ட குடிநீரான மேட்டுப்பாளையம், பவானி தண்ணீரும் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது 4-வது திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகத்திற்கான பணிகள் நடைபெறுவதால் பொதுக்குழாய்களில் முதலாம் திட்ட குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக 24 மணி நேர பொதுக்குழாய்களில் 2-வது திட்ட குடிநீரும், வீடுகளுக்கு 2 மற்றும் 3-வது திட்ட தண்ணீர் கலந்தும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதிகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிகிறது.

முற்றுகை

இந்த நிலையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை பெரியார்காலனி முதல் அனுப்பர்பாளையம் வரை தனிமனித இடைவெளியுடன் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்திற்காக திரண்டிருந்த பெரியார்காலனி, அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம்புதூர், 15 வேலம்பாளையம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் குடிநீர் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி கமிஷனர் வாசுக்குமாரை சந்தித்து கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெரியார்காலனி மேல்நிலை தொட்டியில் நீரேற்றி, குடிநீர் முறையாக வழங்க வேண்டும். ஏற்கனவே கூறியபடி 3 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்க வேண்டும். 1-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வதுடன், புதிய குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் குழாய் பழுது நீக்கம் மற்றும் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர் வாசுக்குமார் முதற்கட்டமாக நாளை (இன்று) பெரியார்காலனி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீரேற்றி, அந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்திற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story