திருப்பூரில் வங்கி அதிகாரி போல் நடித்து 6 பவுன் நகை, ரூ.2 லட்சம் மோசடி பெண் கைது
திருப்பூரில் வங்கி அதிகாரி போல் நடித்து 6 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரத்தை சேர்ந்த சவுந்தர்ராஜனின் மகள் சூர்யா(வயது 25). இவர் காரணம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பூக்கடை வைத்துள்ளார். இவரிடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த சோனியா(34) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார்.
சோனியா, தான் திருப்பூரில் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருவதாகவும், தங்கள் வங்கியில் பழைய நகைகள் ஏலத்துக்கு வரும்போது அதை குறைந்த விலைக்கு வாங்கி கொடுப்பதாக சூர்யாவிடம் கூறியுள்ளார்.
6 பவுன் நகை
சூர்யாவும் இதை நம்பியுள்ளார். பின்னர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி சூர்யாவும், அவருடைய தோழி கல்பனாவும் திருப்பூர் வந்தனர். அங்கு வந்த சோனியா பழைய நகைகளை வாங்க பணம் கேட்டுள்ளார். சூர்யா தான் கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது சோனியா அவர்களிடம் கூடுதலாக நகை ஏலத்துக்கு வருகிறது. அதனால் தங்களிடம் உள்ள நகைகளை கொடுங்கள் அதை வைத்து கூடுதல் தங்க நகையை பெறலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சூர்யா, கல்பனாவிடம் இருந்த 6 பவுன் நகையை கொடுத்துள்ளார்.
தலைமறைவு
ஆட்டோவில் 3 பேரும் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரத ஸ்டேட் வங்கி வாசல் முன்பு சென்றுள்ளனர். சூர்யாவையும், கல்பனாவையும் இறக்கி விட்டு விட்டு சோனியா முன்னால் செல்வதாக கூறி ஆட்டோவில் சென்றவர் அதன்பிறகு வங்கிக்கு வரவில்லை.
அவர் அப்படியே தலைமறைவானது தெரியவந்தது. வங்கியில் சென்று விசாரித்த பிறகே சோனியா அங்கு உதவி மேலாளராக வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சூர்யா திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சோனியாவை தேடி வந்தனர்.
பெண் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் வைத்து சோனியாவை போலீசார் பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சோனியா திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், வங்கி அதிகாரி போல் நடித்து சூர்யாவிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சம், 6 பவுன் நகையை ஏமாற்றி மோசடி செய்ததும் தெரியவந்தது.
ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு சென்ற சோனியா, பணம் மற்றும் நகையை விற்று செலவு செய்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சோனியாவை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்
Related Tags :
Next Story