கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் வாசலில் நின்று சாமி தரிசனம்
புதுக்கோட்டையில் கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு நடைகள் சாத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கோவில்களை 8-ந் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்படுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் தடை தொடருகிறது.
பக்தர்கள் ஏமாற்றம்
இதற்கிடையே மத்திய அரசு கோவில்களை திறக்க அனுமதி அளித்திருந்ததால் நேற்று புதுக்கோட்டையில் கோவில்கள் திறந்திருக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று தரிசனம் செய்ய பக்தர்கள் சிலர் வந்திருந்தனர். ஆனால் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை தொடருவதாக கோவில் தரப்பில் தெரிவித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். கோவில் நுழைவுவாயில் அருகே வாசலில் நின்று அம்மனை வேண்டி வழிபாடு நடத்தினர். மேலும் கோவில் முன்பு உள்ள சூலாயுதத்திற்கு மாலை அணிவித்து, சூடம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டனர்.
கோவிலையொட்டி உள்ள தேங்காய், பழம், பூக்கடைகள் திறந்திருந்தன. கோவில் நடை திறக்கப்படாததால் பக்தர்கள் அதிகம் வரவில்லை. பூ மாலைகளை கட்டி வைத்திருந்த கடைக்காரர்கள், பக்தர்கள் வருகையை எதிர்பார்த்திருந்தனர்.
பூஜை மட்டும் நடந்தது
இதேபோல் பிரகதாம்பாள் கோவில், சாந்தாரம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஆண்டாள் கோவில், கொன்னையூர் முத்து மாரியம்மன் கோவில் உள்பட பிரசித்தி பெற்ற கோவில்களும் திறக்கப்படவில்லை. ஆகம விதிகளின் படி பூஜை மட்டும் நடந்து வருகிறது. இதேபோல மற்ற வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story