தாராபுரம் அருகே 11 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது


தாராபுரம் அருகே   11 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 9 Jun 2020 11:12 AM IST (Updated: 9 Jun 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே 11 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சின்னபுத்தூர் உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காய்கறிகள், மாட்டு தீவனங்கள், முருங்கை, பயிர் வகைகளை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி அப்பகுதியில் சுற்றித்திரியும் மயில்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மயில்களின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அங்குள்ள ஒரு தோட்டத்து நிலத்தில் ஆங்காங்கே 11 மயில்கள் செத்து கிடந்தன. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காங்கேயம் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

விவசாயி கைது

தகவல் அறிந்ததும் வனச்சரக அலுவலர் பிரவீன்குமார், வனக் காப்பாளர் திருமூர்த்தி, வனவர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். செத்து கிடந்த 11 மயில்களின் உடல்களையும் மீட்டனர். இது தொடர்பாக விசாரித்த போது, சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரான விவசாயியான அதே ஊரை சேர்ந்த முத்துச்சாமி மகன் சேமலையப்பன் (வயது 49) விஷம் வைத்து அந்த மயில்களை கொன்றதாக ஒப்புக்கொண்டார். பயிர்களை சேதப்படுத்தியதால் ஆத்திரத்தில் செய்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காங்கேயம் வனத்துறையினர் மயில் களை விஷம் வைத்து கொன்றதற்காக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சேமலையப்பனை கைது செய்தனர். இறந்த மயில் கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு வனப்பகுதி யில் புதைக்கப்பட்டது. அதன் உடற்பாகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story