எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நுழைவுச்சீட்டு வினியோகம் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் உற்சாகம்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நுழைவுச்சீட்டு வினியோகம் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 9 Jun 2020 11:17 AM IST (Updated: 9 Jun 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நுழைவுச்சீட்டு வினியோகிக்கப்பட்டது. இதற்காக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

புதுக்கோட்டை, 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நுழைவுச்சீட்டு வினியோகிக்கப்பட்டது. இதற்காக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

நுழைவுச்சீட்டு

கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைய உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 333 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்து 655 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் முக கவசங்கள் அந்தந்த பள்ளிகளில் நேற்று வினியோகிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுழைவுச்சீட்டுடன் முக கவசங்களை பெறுவதற்காக மாணவிகள் நேற்று காலையில் பள்ளிக்கு வந்திருந்தனர். சில மாணவிகளை பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்தனர். சிலர் கைக்குட்டைகளை முக கவசமாக பயன்படுத்தி இருந்தனர்.

சீருடையில் மாணவிகள்

ஊரடங்கை தொடர்ந்து பள்ளி மூடப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சீருடை அணிந்து வந்திருந்த மாணவிகள் உற்சாகமாக காணப்பட்டனர். அவர்கள் சக மாணவிகள், தோழிகளை கண்டு குதூகலமாகி, ஒருவரையொருவர் நலம் விசாரித்ததை காணமுடிந்தது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டு மற்றும் முக கவசங்களை ஆசிரியைகள் வழங்கினர். இதேபோல் பிளஸ்-1 மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டு, முக கவசம் வினியோகிக்கப்பட்டது. இதனை பெறுவதற்காக மாணவிகள் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிலர் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், சிலர் கடைபிடிக்காமல் அருகருகேயும் அமர்ந்திருந்தனர். நுழைவுச்சீட்டை பெற்றதும் அவர்கள் வீட்டிற்கு திரும்பினர். இதேபோல மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நுழைவுச்சீட்டு வினியோகிக்கப்பட்டது.

பஸ் வசதி

தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி கூறுகையில், “பொதுத்தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் முக கவசங்கள் வரப்பெற்று வினியோகிக்கப்பட்டுள்ளன. போதுமான முக கவசங்கள் இருப்பு வைக்கப்படும். தேர்வு மையங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வசதியாக வழித்தடங்களில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்த மாணவர்கள் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். மாணவர்களை பரிசோதனை செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் கருவி வர வேண்டி உள்ளது” என்றார்.

இதற்கிடையில் வெளியூர்களில் படிக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகள் 52 பேரை, தேர்வு எழுத வசதியாக பஸ்சில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். மாணவர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனை செய்து அனுப்பினர். தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளி வைக்க கோரியது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story