மின்சார திருத்த மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டி
விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறினார்.
திருப்பூர்,
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமுர்த்தி, செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கால்நடை சந்தைகள் செயல்படவில்லை. கால்நடை வளர்க்கும் விவசாயிகள் ஆடு, மாடு வாங்கவும், விற்கவும் இயலாமல் உள்ளனர். இதனால் கிராம பொருளாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
சமூக இடைவெளியை கடைபிடித்து ஆடு, மாடு சந்தையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.
அமராவதி பழைய வாய்க்கால்
உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலத்தில் அமைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையை போலவே திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். இந்த இழப்பீடு தொகையை வழங்கிய பின்பு உயர்மின் கோபுர வேலையை தொடங்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி பழைய வாய்க்கால் 16 உள்ளது. இவை மண் வாய்க்கால். வண்டல் மண் இந்த வாய்க்காலில் ஆங்காங்கே தேங்கி இருக்கிறது.
இதை விவசாயிகள் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு வண்டல் மண் கிடைப்பதுடன், வாய்க்காலும் ஆழப்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும்போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த மசோதா 2020 விவசாயிகளுக்கு கிடைத்து வரும் இலவச மின்சாரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே உடனடியாக இந்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழக முதல்-அமைச்சர், மின்துறை அமைச்சர் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதை மத்திய அரசிடம் அவர்கள் எடுத்துக்கூறி விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். பா.ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து கிடையாது என்று கூறியிருக்கிறார். அவர் முதலில் அந்த திருத்த மசோதாவை சரியாக படிக்க வேண்டும். மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும்.
Related Tags :
Next Story