பெரம்பலூரில் கொரோனா நிவாரண நிதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஆடிப்பாடி மனு கொடுத்த நாட்டுப்புற கலைஞர்கள்
பெரம்பலூரில் கொரோனா நிவாரண நிதி கேட்டு ஆடிப்பாடி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் கொரோனா நிவாரண நிதி கேட்டு ஆடிப்பாடி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மனு கொடுத்தனர்.
மனு
பெரம்பலூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தோழர் ஜீவா, அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் தங்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்திற்கு நிவாரண நிதி வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு வேடம் அணிந்து ஆடல்- பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மனு கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆடல்- பாடல் நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்தார். செயலாளர் ரமேஷ், பொருளாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாட்டுப்புற கலைஞர்கள் தாரை தப்பாட்டம் அடித்தும், பல்வேறு வேடங்களில் கூத்து கட்டியும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரினார். இதில் திரளான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
நிவாரணம் வழங்கவேண்டும்
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) சங்க பிரதிநிதிகள் மனுகொடுத்தனர்.
அந்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாட்டுப்புற கலைகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டு தெருக்கூத்து, தாரை, தப்பட்டை, டிரம்செட், தமுர்மேளம் ஆகியவைகளை திருமணம், திருவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும், துக்க காரியங்களுக்கு தப்பாட்டம், மேளம் போன்ற இசைக்கருவிகளை வாசித்தும், நடனமாடியும் அதில் வரும் வருமானத்தை வைத்து நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்துவிதமான நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளதால், நாட்டுப்புற கலைஞர்களுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாமல், உணவுக்கும் வழியில்லாமல் மிகவும் சிரமத்தில் உள்ளார்கள். மேலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நிவாரணத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே கிராமப்புற கலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அமைப்பு சாராத வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்கள், பதிவு செய்து அடையாள அட்டை பெறாதவர்கள் என அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும்.
மேலும் பல ஆண்டுகளாக நாட்டுப்புற கலைஞர்களாக பணியாற்றும் கலைஞர்களுக்கும், பதிவு செய்யாமல் விடுபட்ட கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story