டால்மியா சிமெண்டு ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு; லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
டால்மியா சிமெண்டு ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
டால்மியா சிமெண்டு ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரிகள் சிறைபிடிப்பு
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பளிங்காநத்தம் எல்லையில் உள்ள டால்மியா சிமெண்டு ஆலை நிறுவனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் பெண்கள், கர்ப்பிணிகள் என பலரும் கடுமையான மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல், தொண்டையில் எச்சில் முழுங்க இயலாத நிலை என பல்வேறு உபாதைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான லாரிகளில் வந்த கழிவுகளை கண்ட அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை மறித்து கழிவுகளை எரிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
அப்போது போலீசாரிடம் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், கழிவுகளை எரிக்கும் ஆலை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. பணம் உங்களுக்கு, நோய் எங்களுக்கா என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை சிமெண்டு ஆலை நிர்வாகம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் நிர்வாகம் இந்த ஆலையில் ஆய்வு நடத்த வேண்டும். தமிழக அரசு கொரோனாவை விரட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழக அரசின் விதிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் முரணாக பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதனால் புவி வெப்பமடையும், மேலும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் கொரோனா வரும் வாய்ப்பு அதிகம் உண்டு எனவும் அச்சம் தெரிவித்தனர். மேலும் ஆலையில் இருந்து புகை அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் துணி கூட காய வைக்க முடியவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலை நிர்வாகத்தினரின் செயலை கண்டு கொள்வதே இல்லை என்றனர்.
இதனையடுத்து ஆலை நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். பின் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல கல்லக்குடி போலீசார் மனு ஒன்றை எழுதி தரும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கிராம மக்களும் கோரிக்கைகளை மனுவாக எழுதி தருவதாக கூறினர்.
Related Tags :
Next Story