சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி - வடமாநில தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா


சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி - வடமாநில தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா
x
தினத்தந்தி 10 Jun 2020 3:30 AM IST (Updated: 10 Jun 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி வடமாநில தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துமேடு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 162 தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வருவாய்த்துறை மூலம் ஒப்புதல் பெற்றனர்.

இருப்பினும் சில நிர்வாக பிரச்சினையால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வடமாநில தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒடிசா மாநிலத்துக்கு நடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊராட்சி தலைவர் சுதாகர் மற்றும் செங்கல் சூளையின் உரிமையாளர் வெங்கட்ரத்தினம் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தாசில்தார் மற்றும் கலெக்டரிடம் பேசி அவர்களது ஒப்புதலின் பேரில் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக உறுதி கூறினர்.

இதனை ஏற்க மறுத்த வட மாநில தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இன்னும் 4 நாட்களில் தொழிலாளர்களை ரெயில் மூலம் அனுப்பி வைப்பதாக உறுதி கூறினர்.

இதன் பின்னர், அனைவரும் சமாதானம் அடைந்து தங்களது இருப்பிடத்திற்கு திரும்பினர்.

இதற்கிடையே வெங்கல் அருகே ஆயிலசேரி ஊராட்சியை சேர்ந்த புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 252 தொழிலாளர்கள் தங்களது மாநிலத்துக்குச் செல்ல வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மண்டல தாசில்தார் சரவணகுமரி, வருவாய் ஆய்வாளர் நரசிம்மன் உள்ளிட்ட அதிகாரிகள் பஸ்கள் மூலம் அவர்களை திருவள்ளூருக்கு அனுப்பி, அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story