தமிழகத்தில் முதலீடு செய்ய 8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் அழைப்பு - சாதகமான அம்சங்களை குறிப்பிட்டு கடிதம்


தமிழகத்தில் முதலீடு செய்ய 8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் அழைப்பு - சாதகமான அம்சங்களை குறிப்பிட்டு கடிதம்
x
தினத்தந்தி 10 Jun 2020 4:15 AM IST (Updated: 10 Jun 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதலீடு செய்திட 8 முன்னணி மருந்து, மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவு எடுத்துள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன.

இது, பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, அக்யூரே நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஜோசுவா லெவின், பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பிரான்ஸ் வேன் கெளட்டன், சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் ஜெர்டு ஹாப்னர், சிரோனா டெண்டல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டொனால்டு கேசி, காப்பியம்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் லியு, ஜி ஈ ஹெல்த் கேர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிரென் மர்ப்பி, ஹர்கோ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மைக்கேல் டோவார் மற்றும் பாஸ்டன் சயன்டிபிக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மைக்கேல் எப்.மகோனி ஆகிய 8 முன்னணி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழகத்தில் முதலீடு செய்திட நேரடியாக அழைப்பு விடுத்து முதல்அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ‘தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகள் வழங்கிடும்’ என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story