தூர்வாரும் பணி 70 சதவீதம் நிறைவு வேளாண் உற்பத்தி ஆணையர் பேட்டி


தூர்வாரும் பணி 70 சதவீதம் நிறைவு வேளாண் உற்பத்தி ஆணையர் பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2020 4:00 AM IST (Updated: 10 Jun 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

தூர்வாரும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.

தஞ்சாவூர்,

தூர்வாரும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.

ஆய்வு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா புதூர் கிராமத்தில் காரிமுத்து ஏரியில் ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணி நடக்கிறது. அதேபோல் நெடுவாக்கோட்டையில் கல்யாணஓடை வாய்க்கால் ரூ.18 லட்சத்திலும், வீரக்குறிச்சி கிராமத்தில் 2-ம் எண் வாய்க்கால் ரூ.4 லட்சத்து 8 ஆயிரத்திலும், மகாராஜசமுத்திரம் ஆறு ரூ.24 லட்சத்திலும் தூர்வாரப்படுகிறது.

இந்த பணிகளை வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு முதன்மைச் செயலாளரும், குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளின் சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடுதல் எந்திரங்கள்

தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் 260 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் எந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன. வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று வரும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் 3 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.500 கோடியும், தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.67 கோடியும் தமிழகஅரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

70 சதவீத பணிகள்

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணி இதுவரை 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. முதலில் தண்ணீர் வரும் கால்வாய்கள் மற்றும் வாய்க் கால்களுக்கு முன்னுரிமை கொடுத்து தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்கு பல்வேறு திட்டங் களை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பணியாளர்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். கிராமங்களில் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படும். குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலெக்டர் கோவிந்தராவ், உதவி கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பயிற்சி கலெக்டர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story