எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்ததால் மகிழ்ச்சி: 11-ம் வகுப்பில் விரும்பும் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும்
11-ம் வகுப்பில் விரும்பும் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என தஞ்சை மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
தஞ்சாவூர்,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில் 11-ம் வகுப்பில் விரும்பும் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என தஞ்சை மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
தேர்வு ரத்து
கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி நடைபெற இருந்தது. இதற்காக ஹால் டிக்கெட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தேர்வுக்கான ஏற்பாடுகளும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வந்தன. கொரோனா பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நேற்று முன்தினம் காட்டமாக கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
வரவேற்கிறோம்
தஞ்சையை சேர்ந்த பார்வையற்ற மாணவர் பிரவீன்குமார்:- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே நாங்கள் நன்றாக படித்துவிட்டோம். நாங்கள் சொல்வதை கேட்டு ஆசிரியர் ஒருவர் தான் தேர்வு எழுதுவார். எங்களுக்கு மிக அருகில் அமர்ந்து இருந்தால் தான் நாங்கள் சொல்வதை அவர்களும், அவர்கள் சொல்வதை நாங்களும் நன்றாக கேட்க முடியும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக மிக அருகில் இருப்பது என்றால் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். தேர்வில் எங்களால் கவனம் செலுத்த முடியாது. அதனால் தேர்வு ரத்தானதை வரவேற்கிறோம்.
காதுகேளாத, வாய் பேச முடியாத மாணவி ஜீவிதா: தேர்வு எழுத நன்றாக தயாராகி இருந்தேன். தேர்வு எழுதாதது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அரசு எடுத்த முடிவை வரவேற்கிறோம். அடுத்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை நன்றாக எழுதி அதிகமதிப்பெண் பெற முயற்சி செய்வேன்.
விரும்பும் பாடப்பிரிவு
தஞ்சை தனியார் பள்ளி மாணவி பிரியதர்ஷினி:- தேர்வு ரத்து செய்யப்பட்டது சந்தோஷம் தான். அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்தால் குறைவாக தான் மதிப்பெண் வரும். அரையாண்டுக்கு பிறகு 3 தேர்வுக்காக மீண்டும், மீண்டும் படித்துள்ளதால் பொதுத்தேர்வு நடத்தி இருந்தால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பாக இருந்திருக்கும். 11-ம் வகுப்பில் மதிப்பெண் அடிப்படையில் இதுவரை பாடப்பிரிவு ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மதிப்பெண்ணை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மாணவர்கள் விரும்பக்கூடிய பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க அனுமதி அளித்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.
தஞ்சை அரசர் பள்ளி மாணவர் அரியபத்ரன்: பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என கஷ்டப்பட்டு படித்து இருந்தேன். தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது. ஆனால் அரையாண்டு தேர்வு மதிப்பெண் மட்டும் கவனத்தில் கொள்ளக்கூடாது. மாணவர்கள் விரும்பக்கூடிய பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் மனதில் உள்ள இந்த சந்தேகத்தை போக்க வேண்டும்.
கால அவகாசம்
தனியார் பள்ளி மாணவி ஆயிஷா பேகம்:- தேர்வுக்கு நன்றாக தயாராகி இருந்தேன். அரையாண்டு தேர்வு வரை பாடங்கள் கடினமாக தான் இருந்தது. அதன்பிறகு பாடங்களை புரிந்து படிக்க கால அவகாசம் இருந்தது. அரையாண்டு தேர்வை விட அதிக மதிபெண் தான் பொதுத்தேர்வில் வரும் என்பதை கடந்த கால தேர்வை வைத்து அறிந்து கொள்ள முடியும். நான் கணித உயிரியியல் பாடப்பிரிவை தேர்வு செய்யும் எண்ணத்தில் உள்ளேன். மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவை கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
முன்கூட்டியே...
பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஷோபியா மாலதி: பார்வை திறன் குறைந்த மாணவர்களால் தனியாக தேர்வு எழுத முடியாது. அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டியது அவசியம். முக கவசம் அணிந்து கொண்டு மாணவர்கள் சொல்லும் விடை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் கேட்கக்கூடிய வினா மாணவர்களுக்கும் சரியாக கேட்காது.
சமூக இடைவெளி விட்டு இருவரும் அமர்ந்து இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குள் புரிதல் இருக்காது. மேலும் இருமல், தும்மல் வந்தால் கூட அதை அடக்கி கொண்டே ஒருவித பயத்துடன் அமர வேண்டிய நிலை உள்ளது. முன்கூட்டியே தேர்வை ரத்து செய்து இருக்கலாம். இப்போது ரத்து செய்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயமாகும்.
மகிழ்ச்சி
பெற்றோர் தரப்பில் தஞ்சை வெற்றி:- மாணவர்கள் நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணை வைத்து தான் வாழ்க்கையில் அடுத்தநிலைக்கு மாணவர்கள் செல்கின்றனர். இந்த மதிப்பெண்ணை வைத்து தான் பாடப்பிரிவு வழங்கப்படும். அரையாண்டு தேர்வுக்கு பிறகு பாடங்களை மீண்டும், மீண்டும் படிக்க பல மாதங்கள் அவகாசம் இருந்துள்ளது. அதனால் அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை விட பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்ணை மாணவர்கள் பெறுவார்கள். இவற்றை கருத்தில் கொண்டு 11-ம் வகுப்பில் பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story