10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்
x
தினத்தந்தி 10 Jun 2020 4:15 AM IST (Updated: 10 Jun 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

தேர்வு எழுத தேவையான ஹால் டிக்கெட் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டதுடன், அந்தந்த பள்ளிகளில் ஹால்டிக்கெட் மற்றும் 2 முக கவசம் வழங்கப்பட்டது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வருகிற 11-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இதனால் தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகே உள்ள பார்வைதிறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், காதுகேளாதோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி, காதுகேளாதோருக்கான அரசு பள்ளிக்கு நேரில் வந்து மாணவ, மாணவிகள் எப்படி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கலாம் என்பது குறித்து ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

அப்போது, இவர்கள் அனைவரையும் இன்று(புதன்கிழமை) சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று வெளிவருகிறது.

Next Story