சேதுபாவாசத்திரம் அருகே குளம் தூர்வாரும் பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


சேதுபாவாசத்திரம் அருகே குளம் தூர்வாரும் பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 11:07 PM GMT (Updated: 9 Jun 2020 11:07 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே குளம் தூர்வாரும் பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம்,

சேதுபாவாசத்திரம் அருகே குளம் தூர்வாரும் பணியின்போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கட்டயங்காடு அய்யனார் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பொக்லின் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரியபோது, அந்த பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. இதனை பார்த்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், பட்டுக்கோட்டை தாசில்தார் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.

ஆய்வு நடத்த ஏற்பாடு

தகவல் அறிந்து கோவிந்தராசு எம்.எல்.ஏ. அங்கு வந்து முதுமக்கள் தாழியை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், இதுகுறித்து கலெக்டர், தொல்லியல் துறை அமைச்சர் ஆகியோர்களிடம் பேசுவதாகவும், முழுமையாக ஆய்வு நடத்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கடந்த 1996-ம் ஆண்டு இந்த குளத்தின் அருகில் வேறொரு இடத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதாகவும், அதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தற்போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம் என்றும், இதேபோல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் முதுமக்கள் தாழி புதைந்து இருக்கலாம் என்றும், தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினால் இதன் முழு விவரம் தெரிய வரும் என்றும் கூறினர்.

பணிகள் நிறுத்தம்

முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் கம்புகளை நட்டு, கொடி அமைத்து சமூக ஆர்வலர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதையடுத்து தூர்வாரும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Next Story