அணில் சேமியா நிறுவன பங்குதாரர்களிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது
திண்டுக்கல்லில் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அணில் சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பவர்கள் ரவிச்சந்திரன், சுகுமார். இவர்கள் இருவரையும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 2 பேர் செல்போனில் தொடர்புகொண்டு அணில் சேமியா தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், அதனை வெளியே தெரிவிக்காமல் இருக்க தங்களுக்கு ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம், நிறுவன பங்குதாரர்கள் இருவரும் புகார் மனு அளித்தனர். அப்போது தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் தரமானதாகவும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெய்கானா மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் அணில் சேமியா நிறுவன பங்குதாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியது குஜிலியம்பாறையை சேர்ந்த சிவக்குமார் (வயது 37), திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீதர் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story