எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து: மாணவர்கள்-பெற்றோர் வரவேற்பு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர்கள்-பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சீர்காழி,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர்கள்-பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து
கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி நடைபெற இருந்தது. இதற்காக ஹால் டிக்கெட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தேர்வுக்கான ஏற்பாடுகளும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வந்தன. கொரோனா பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நேற்று முன்தினம் காட்டமாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து நாகை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
வரவேற்கத்தக்கது
சீர்காழி தனியார் பள்ளி மாணவி பிரதமஜா:-
தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் தேர்வு நடத்தினால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மேல்படிப்புக்கு பத்தாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையாக இருக்கும். தேர்வு நடத்தி அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் நாம் விரும்பிய பாடப்பிரிவை எடுத்து படிக்கலாம். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
பீதியாக உள்ளது
சீர்காழி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் மதன்குமார்:-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் ஒவ்வொரு மாணவரின் எதிர்கால கனவாக இருக்கும். நானும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆர்வத்துடன் படித்து வந்தேன். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
தேர்வு வைத்தால்தான் அதிக மதிப்பெண்களை பெறமுடியும். வருங்காலங்களில் எந்த வேலைக்கு செல்ல வேண்டுமானாலும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்தான் முக்கியமானதாகும். தற்போது மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் வரும் என்று பீதியாக உள்ளது. தமிழக அரசு தேர்வை ரத்து செய்யாமல் தள்ளி வைத்திருக்கலாம்.
மதிப்பெண் கணக்கீடு
நாகை அருகே செல்லூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ்:-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக நான் நல்ல முறையில் தயாராகி கொண்டிருந்தேன். அப்போது கொரோனாவால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் என்னால் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதையடுத்து தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். மீண்டும் கஷ்டப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கடினமாகவே இருந்தது. இருந்தும் காலாண்டு, அரையாண்டைவிட நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
தேர்வுக்காக நான் நல்ல முறையில் தயாரான நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு புறம் இந்த அறிவிப்பு எனக்கு வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் தேர்வு ரத்தானது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று சொல்வது சரியானதல்ல. இதனை மாற்ற வேண்டும்.
நிம்மதியளிக்கும் அறிவிப்பு
நாகையை அடுத்த அழிஞ்சமங்கலம் அரசு பள்ளி மாணவி ரேகா:-
லட்சக்கணக்காணோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பீதியில் உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்தினால் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தற்போது தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. நான் தேர்வுக்காக நல்ல முறையில் என்னை தயார்படுத்தி வந்தேன்.
இதைவிட மகள் எப்படி தேர்வு எழுதிக்கொண்டு வருவாளோ என எனது பெற்றோர் மிகுந்த பயத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்வு ரத்து அறிவிப்பு எங்களை விட பெற்றோர்களுக்கே பெரும் நிம்மதியளிக்கும் அறிவிப்பாக உள்ளது.
அச்சத்தில் இருந்தோம்
நாகையை சேர்ந்த மாணவரின் தந்தை வேதரத்தினம்:-
கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது ஏற்புடையதல்ல. நோயின் தீவிர தாக்கத்தால் நாங்கள் அச்சத்தில் இருந்தோம். அந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழக அரசு தற்போது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
முன்கூட்டியே அறிவித்து இருக்கலாம்
நாகையை அடுத்த ஒரத்தூரை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம்:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தேர்வு, மதிப்பெண்களை வைத்து மட்டும் மதிப்பீடு செய்வது கல்வி கிடையாது. இந்த தேர்வை(10-ம்வகுப்பு) பொறுத்தவரை மாணவர்கள் இடையே நல்ல முறையிலான கற்றல் நடந்திருக்கிறது. தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மேல்படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அரையாண்டு, காலாண்டு தேர்வை வைத்து மதிப்பெண்கள் போட்டு விடலாம்.வினாத்தாள்கள் பாதுகாப்பு, கிருமிநாசினி தெளிப்பு, தேர்வு அறைகள் தயார் படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடந்து வந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆசிரியர்களிடையே தேவையில்லாத அலைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு ரத்து என்கிற அறிவிப்பை அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தால், மாணவர்கள் மனஉளைச்சல் இல்லாமல் இருந்திருப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story