மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கடைசி நாளில்: தேவேகவுடா, பா.ஜனதா வேட்பாளர்கள் மனு தாக்கல் - இன்று மனுக்கள் பரிசீலனை


மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கடைசி நாளில்: தேவேகவுடா, பா.ஜனதா வேட்பாளர்கள் மனு தாக்கல் -  இன்று மனுக்கள் பரிசீலனை
x
தினத்தந்தி 10 Jun 2020 12:09 AM GMT (Updated: 2020-06-10T05:39:50+05:30)

மாநிலங்களவை தேர்தலையொட்டி கடைசி நாளில் தேவேகவுடா, பா.ஜனதா வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

பெங்களூரு.

மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை கர்நாடக காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் கடைசி நாளில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் விதான சவுதாவுக்கு வந்து சட்டசபை செயலாளரான தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி, முன்னாள் மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, பண்டப்பா காசம்பூர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மனு தாக்கலின்போது அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஆனால் கேமராவுக்கு முகத்தை காட்ட, அவர்கள் முகக்கவசத்தை சற்று வாய்க்கு கீழே விலக்கினர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தேவேகவுடாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் அகில இந்திய தலைவி சோனியா காந்தி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அதேபோல், பா.ஜனதா சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி ஆகியோரும் விதான சவுதாவுக்கு வந்து தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் மனு தாக்கல் செய்தனர். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி ஆகியோர் உடன் இருந்தனர். பா.ஜனதா வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தபோது, ரமேஷ் ஜார்கிகோளி, லட்சுமண் சவதியை தவிர எடியூரப்பா உள்பட மற்ற அனைவரும் முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்திருந்தனர்.

சுயேச்சையாக சங்கமேஸ் சிக்கநரகுந்து என்பவரும் மனு தாக்கல் செய்தார். 4 இடங்களுக்கு 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனை இன்று(புதன்கிழமை) நடக்கிறது. சட்டப்படி பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அவ்வாறு பார்த்தால், சுயேச்சை வேட்பாளர் சங்கமேஸ் சிக்கநரகுந்துவின் மனுவை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் அவரது மனு தள்ளுபடி ஆவது உறுதி. அவ்வாறு சுயேச்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் மட்டும் களத்தில் இருப்பார்கள். அதனால் 4 பேரும் போட்டியின்றி ஒருமனதாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story