அச்சத்தால் ஏற்பட்ட தவறுக்கு பணியிடை நீக்கம் செய்வது தவறு ; அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம்


அச்சத்தால் ஏற்பட்ட தவறுக்கு பணியிடை நீக்கம் செய்வது தவறு ; அன்பழகன் எம்.எல்.ஏ. கண்டனம்
x
தினத்தந்தி 10 Jun 2020 12:16 AM GMT (Updated: 10 Jun 2020 12:16 AM GMT)

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த போது அச்சத்தால் ஏற்பட்ட தவறுக்கு பணியிடை நீக்கம் செய்து இருப்பது கண்டனத்துக்குரியது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். பணி செய்யும் போது ஏற்படும் அச்சத்தால் தவறிழைக்கும் கடைநிலை ஊழியர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது என்பது இடுகாட்டில் உள்ள ஊழியர்களின் பணியாகும். அங்கு ஊழியர்கள் இல்லாததால் மனிதாபிமான முறையில் மேல் அதிகாரிகளின் நிர்பந்தத்தின் பேரில் கொரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்த போது அச்சத்தால் சிறு தவறு செய்துள்ளனர். இதுகுறித்து அறிவுரை வழங்கி இருக்க வேண்டுமே தவிர பணியிடை நீக்கம் செய்தது தவறு.

கொரோனா நேரத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது. 3 ஊழியர்களின் மீது எடுத்த நடவடிக்கையை முதல்-அமைச்சர் நாராயணசாமி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

புதுவை மாநிலத்தில் ஒரே மாதத்தில் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரியகடை மார்க்கெட்டால் கொரோனா தொற்று அதிகமாக பரவும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம், கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் மீன்பிடி நிவாரணம் வழங்கப்படவில்லை. 2 நாட்களுக்குள் அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்கவில்லை என்றால் தலைமைக்கழக அனுமதி பெற்று மீனவர்களை திரட்டி மாநில அரசு, கவர்னரை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story