ஒரே குடும்பத்தில் 4 பேர் உள்பட 14 பேருக்கு கொரோனா குமரியில் மீண்டும் பரபரப்பு
ஒரே குடும்பத்தில் 4 பேர் உள்பட குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குமரியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
ஒரே குடும்பத்தில் 4 பேர் உள்பட குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குமரியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7-ந் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக இருந்தது. அவர்களில் 65 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முதியவர் இறந்துவிட்டார். மீதம் உள்ள 42 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சுகாதார பணியாளர் குடும்பத்தில் 4 பேர் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதன் விவரம் வருமாறு:-
சுகாதார பணியாளர்
கருங்கல் கண்ணன்விளை பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், சுகாதார பணியாளராக கீழ்குளம் அருகே செந்தறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரை களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணிக்காக அதிகாரிகள் பணி அமர்த்தியுள்ளனர். அதன்படி கடந்த மாதம் 26 மற்றும் 30-ந் தேதிகளில் அவர் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் அவருக்கு கடந்த 5 நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
இதையடுத்து அவர் செந்தறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. கடந்த 7-ந் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகளை சேகரித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த சுகாதார பணியாளரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து, கொரோனா சிகிச்சை வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதன் முதலாக பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களில் கொரோனா பாதிப்புக்கு முதன்முதலாக ஆளான நபர் இவர்தான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். களியக்காவிளை சோதனை சாவடி பணியில் இருந்தபோது அங்கு கொரோனா தொற்றுடன் வந்த நபர் மூலமாக இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியாற்றும் கொரோனா தடுப்பு பணியாளர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மனைவி, மகளுக்கும் தொற்று
இதைத்தொடர்ந்து சுகாதார பணியாளரின் தந்தை, மனைவி, மகள் ஆகியோருக்கும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் சுகாதார பணியாளர் வீடு உள்ள கண்ணன் விளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, இன்று (புதன்கிழமை) அங்கு தடுப்பு அமைத்து, கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.
இதுதவிர வெளியூர்களில் இருந்து வந்தவர்களிடம் இருந்து சோதனை சாவடிகளில் சளி, ரத்தம் சேகரிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நேரடியாக ரத்தம், சளி சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
நேபாள தம்பதி
இவர்களில் கணவன்- மனைவியும் அடங்குவார்கள். அவர்கள் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் கணவன்-மனைவி விருதுநகரில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் காயத்துக்கு கட்டு போடுவதற்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கும் சோதனை நடத்தியதன் மூலம் தெரிய வந்தது.
இதுதவிர திருவரம்பு பகுதியை சேர்ந்த 40 வயது பெண், கப்பியறை செல்லங்கோணம் பகுதியை சேர்ந்த 33 வயது பெண், பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காட்டை சேர்ந்த 34 வயது பெண், மணலிக்கரை புல்லன்விளை பகுதியை சேர்ந்த 58 வயது பெண் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியை சேர்ந்த 43 வயது பெண், கார்மல் மவுண்ட ரோட்டை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுமிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுதவிர மெதுகும்மலை சேர்ந்த 34 வயது ஆணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் ஒரு பெண் டயாலிசிஸ் செய்வதற்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தவர் ஆவார். எனவே நேபாள தம்பதி, டயாலிசிஸ் செய்வதற்காக வந்த பெண் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
122 ஆக உயர்வு
இதன்மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று குணம் அடைந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களை டாக்டர்கள், நர்சுகள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.
குமரி மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதற்கிடையே இந்த 14 பேர் யார்? யாருடன் தொடர்பில் இருந்தார்கள், அவர்கள் எங்கு எல்லாம் சென்றார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story