மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 120 பேர் பலி - மாநகராட்சி துணை கமிஷனர், கவுன்சிலரும் உயிரிழப்பு


மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 120 பேர் பலி -  மாநகராட்சி துணை கமிஷனர், கவுன்சிலரும் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 12:50 AM GMT (Updated: 10 Jun 2020 12:50 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநகராட்சி துணை கமிஷனர், கவுன்சிலர் உள்பட 120 பேர் ஒரே நாளில் பலியானார்கள்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொற்று நோய் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

மாநிலத்தில் இந்த மாதம் முதல் 8 நாளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 787 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு ஒரேநாளில் 120 பேர் பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு 3 ஆயிரத்து 289 பேர் உயிரிழந்து உள்ளனர். 42 ஆயிரத்து 638 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது மாநிலத்தில் 44 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநில தலைநகர் மும்பையிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று நகரில் புதிதாக 1,015 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நகாில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 100 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மும்பையில் புதிதாக 58 பேர் நோய் தொற்றுக்கு பலியானாா்கள். இதுவரை நகரில் 1,760 பேர் ஆட்கொல்லிநோய்க்கு உயிரிழந்து உள்ளனா்.

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பணி புரிந்த துணை கமிஷனர் ஷிரிஷ் தீட்சித் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். 55 வயதான அவர் மாநகராட்சி குடிநீர் வினியோக துறை தலைமை என்ஜினீயரும் ஆவார்.

இவர் நேற்று முன்தினம் வரை பணிக்கு வந்து இருந்தார். குறிப்பாக கோரேகாவ் நெஸ்கோ மைதானம், ஒர்லி என்.எஸ்.சி.ஐ. உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர் ஆவார். இந்தநிலையில் சந்தேகத்தின் போில் 2 நாட்களுக்கு முன் கொரோனா சோதனை செய்து இருந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. எனினும் அவருக்கு நோய் அறிகுறிகள் இல்லாததால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள மற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் பணியில் இருந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் இரவு தூங்கும் போதே அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மும்பையில் உள்ள பெரிய குடிநீர் வினியோக திட்டங்கள் அனைத்தையும் அவர் தான் கவனித்து வந்தார். தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்’’ என்றார். மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் ஒருவரே ஆட்கொல்லி நோய்க்கு பலியானது மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு பலியான மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் கடந்த 1987-ம் ஆண்டு சப்-என்ஜினியராக பணியில் சோ்ந்தவர் ஆவார்.

இதேபோல தானே மாவட்டம் மிரா பயந்தரில் கடந்த வாரம் 55 வயது சிவசேனா கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தானேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். கவுன்சிலர் வயதான தாய், மனைவி, மகனுடன் வசித்து வந்தார். கவுன்சிலரின் மகனும் வைரசால் பாதிக்கப்பட்டார். எனினும் அவர் நோய் பாதிப்பில் இருந்து குணமானார்.

நோய் தொற்றுக்கு பலியான கவுன்சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கட்சியினர் கூறினர்.

இதேபோல மும்பையில் 45 வயது டாக்டர் ஒருவரும், பால்கர் மாவட்டத்தில் 40 வயது போலீஸ்காரர் ஒருவரும் கொடிய கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 5,171 (131 பேர் பலி), தானே புறநகர் - 1,329 (23), நவிமும்பை மாநகராட்சி - 3,695 (87), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,977 (36), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 570 (21), பிவண்டி மாநகராட்சி - 342 (12), மிரா பயந்தர் மாநகராட்சி - 979 (45), வசாய் விரார் மாநகராட்சி -1,415 (37), ராய்காட் - 764 (29),

பன்வெல் மாநகராட்சி - 736 (29), நாசிக் மாநகராட்சி - 535 (22), புனே மாநகராட்சி - 8,708 (395), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 690 (17), சோலாப்பூர் மாநகராட்சி - 1,369 (105), அவுரங்காபாத் மாநகராட்சி - 2,027 (108), நாக்பூர் மாநகராட்சி - 734 (12).

Next Story