கொரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கொரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 1:41 AM GMT (Updated: 2020-06-10T07:11:26+05:30)

கொரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்கக்கோரி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

கொரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்கக்கோரி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கொரோனா கால நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.

இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு செயலாளர் சங்கரபாண்டியன், ரமேஷ், உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

12 இடங்களில்...

வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போக்குவரத்து குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ஜோதி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தியாகராஜநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மின் அரங்க இடைக்கமிட்டி செயலாளர் பீர் முகமதுஷா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், வண்ணமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகரில் மட்டும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் பாப்பாக்குடி, அம்பை, சிவந்திபுரம், ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, புளியரை, பாவூர்சத்திரம், சங்கரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story