ரெயில்வே அதிகாரிக்கு கொரோனா மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் மூடல்
மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவருக்கு கொரோனா பரவியதால், கோட்ட மேலாளர் அலுவலகம் நேற்று மூடப்பட்டது.
மதுரை,
கடந்த 75 நாட்களுக்கும் மேலாக ரெயில்கள் இயக்கப்படாததால், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் ஒரு சில பணியாளர்களை கொண்டு மட்டும் இயங்கி வந்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து பணியாளர்களுடன் செயல்படதொடங்கியது. இதற்கிடையே, வடமாநில தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற சிறப்பு ரெயிலில் பயணம் செய்த மெக்கானிக் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கடுத்த சில நாட்களில், ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியது. அதனை தொடர்ந்து, கோட்ட மேலாளர் அலுவலகம் கடந்த சில நாட்களாக 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் செயல்படுகிறது. இந்தநிலையில், ஊரடங்கு காலத்தில் அலுவலகத்துக்கு வராமல், களப்பணியில் இருந்த அதிகாரிகள், பணியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அலுவலகத்துக்குள் பணிக்கு வர வேண்டும் என கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, களப்பணியில் இருந்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கோட்ட மேலாளர் அலுவலகத்தில், அதிகாரியாக பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த அனைவரும் நேற்று மதியம் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்..
அலுவலகம் மூடல்
பின்னர் அலுவலகம் மூடப்பட்டது. கோட்ட மேலாளர் அலுவலகம் மீண்டும் நாளை மறுநாள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்க செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 80-க்கும் மேற்பட்ட ரெயில்வே அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தென்னக ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம், கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் ஆகியன மூடப்பட்டன. அங்கு தினமும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வந்தன. சுமார் 4 நாட்களுக்கு பின்னரே அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. அதேபோல, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தையும் குறிப்பிட்ட நாட்களுக்கு மூடி வைத்து, கிருமிநாசினி திரவம் தெளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story