இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது:  கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 7:46 AM IST (Updated: 10 Jun 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருமங்கலம், 

மதுரையில் தெற்குவாசல், மேலப்பொன்னகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,500 வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டார்.

திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, பேரூராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய கம்யூனிஸ்டு திருமங்கலம் தாலுகா செயலாளர் சுப்புகாளை உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை திருமங்கலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

கைது

அலங்காநல்லூர், கொண்டையம்பட்டி, குலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை கூடுதலாக வழங்ககோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன், நிர்வாகிகள் மூக்கம்மாள், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

டி.கல்லுப்பட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகம் மற்றும் குன்னத்தூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சமயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கம்யூனிஸ்டு கட்சியின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராணி, செல்லக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை உசிலம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Next Story