வாலிபர் கொலை வழக்கு: அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கு: அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 8:22 AM IST (Updated: 10 Jun 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம் டோல்கேட், 

திருச்சி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சி கீரமங்கலம் மோட்டு தோப்பு பகுதியை சேர்ந்த நல்லமுத்து மகன் கார்த்திகேயன் (வயது 33). இவருக்கும், அதே பகுதி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன்களான ராஜதுரை(28), பரந்தாமன்(22) ஆகியோருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இதனால், கார்த்திகேயனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சகோதரர்கள் இரண்டு பேரும் தங்களது நண்பர்களான தினேஷ் (24), வெங்கடேஷ்வரன் (23), பிரதீப் (19), பிரவீன்குமார் (19), உசுளு என்கிற பிரசாந்த் (22), அப்பாஸ் (23), அக்கீல் (23) மற்றும் சந்தோஷ் (23) ஆகியோரின் உதவியுடன் நேற்று முன்தினம் கார்த்திகேயனை விரட்டி, விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.

6 பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து கார்த்திகேயனின் அண்ணி சத்தியா கொடுத்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் வழக்கு தொடர்பாக திருச்சி பகுதியில் மறைந்திருந்த ராஜதுரை, பரந்தாமன், வெங்கடேஷ்வரன், பிரதீப், பிரவீன்குமார், அப்பாஸ் ஆகிய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரசாந்த், தினேஷ், அக்கீல், சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்க திட்டம்

* திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறைரோடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சிலர் பதுங்கி இருந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று 5 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரா என்கிற வீரமாநேசன்(25), சின்னதம்பி என்கிற மலைசாமி(24), திருப்பதி(28) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வட்டிக் கடைக்காரர் தற்கொலை

* திருச்சி மாநகர ஆயுதப்படைபிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராஜகணபதி. இவர் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை பாதுகாப்பு பணியில் இருந்தார். பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். காவிரி பாலத்தில் வந்தபோது, திடீரென ஒருநபர் சாலையை கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க ராஜகணபதி திடீரென பிரேக் பிடித்தபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

* திருச்சி கோட்டை பகுதி புகழியாபிள்ளை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(67). வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் வெளிநாட்டில் உள்ளார். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி உறையூரில் வசிக்கின்றனர். மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிராவல் மண் கடத்தல்

* தா.பேட்டை அருகே உள்ள கண்ணனூர் பகுதியில் ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுரபிக் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த பொன்னுசங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (29), சின்னராசு (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

* திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த முகமது சுல்தான் மனைவி ராஜாத்தி(40). இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் வசித்து வருபவர் பரிதா. இவரது கணவர் ஜாகீர் உசேன்(46). உறவினர்களான இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஜாகீர் உசேன், ராஜாத்தியை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர்உசேனை கைது செய்தனர்.

சிறுமி மாயம்

* மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று மதியம் ஆடு மேய்க்க சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை, உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மணப்பாறை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

குரங்கு பலி

* மணப்பாறையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடந்த குரங்கு ஒன்றை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த குரங்கு இறந்தது.

Next Story