கண்ணாக்குடி கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கண்ணாக்குடி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கண்ணாக்குடி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும். இங்கு கடந்த 7 ஆண்டுகளாக முன்பு தனியார் ரசாயன ஆலை ஒன்று அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் குழந்தைகள், பெரியவர்கள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ரசாயன கழிவுகளால் விளைநிலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் கூறினால் முறையாக பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் சுகன், கிராம நிர்வாக அதிகாரி மலர்கொடி, வருவாய்ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் ஆலை நிறுவனர் அந்தோணிதாசனிடம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து எடுத்துக் கூறினர்.
மேலும், ஆலை செயல்படுவதற்கான அரசின் ஆவணங்களை கேட்டனர். அதற்கு அவர், விரைவில் சமர்ப்பிப்பதாக கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story