ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி மனு
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என நகராட்சி கடை வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி கடை வியாபாரிகள் சார்பில் முதல்-அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தடுப்புக்காக சிறப்பாக நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். நோய் தடுப்பு நடவடிக்கையாக தாங்கள் அறிவித்த ஊரடங்கு காலத்தில் நகராட்சி கடை வியாபாரிகளான நாங்களும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கடைகளை திறந்து தொழில் செய்து வருகிறோம்.
கடை வாடகை
ஊரடங்கு காலத்திலும், தற்போது தளர்வுகள் அறிவித்த நிலையிலும் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு பெரும் சிரமம் அடைந்துள்ளோம். இந்தநிலையில் ஊரடங்கு காலத்தில் முற்றிலுமாக கடைகள் திறக்கப்படாததால் வருமானம் ஏதும் இன்றி வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் நகராட்சி கடைகளுக்கான வாடகை செலுத்துவதற்கு பெரும் சிரமப்படும் நிலை உள்ளது. மேலும் நகராட்சியால் விதிக்கப்படும் இதர வரிவகைகளையும் செலுத்த இயலாமல் தவித்து வருகிறோம்.
எனவே மீண்டும் பழைய நிலை திரும்பும் வரை ஊரடங்கு காலமான 3 மாத காலத்திற்கும், அதன் பின்னர் உள்ள நாட்களுக்கும் நகராட்சி கடைகளுக்கான வாடகையையும், இதர வரியினங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறு நகராட்சி கடை வியாபாரிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story