மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 3:31 AM GMT (Updated: 10 Jun 2020 3:31 AM GMT)

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநிலஅரசு ரூ.5 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.

திருச்சி, 

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநிலஅரசு ரூ.5 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும். 

வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களுக்கு 6 மாதம் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நேற்று நடந்தது. 

அதன்படி, திருச்சியில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திராவிடமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (லெனினிஸ்ட்) மாவட்ட செயலாளர் தேசிகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதேபோல, துவாக்குடியில் அண்ணா வளைவு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ராஜ்குமார் தலைமையிலும், உப்பிலியபுரம் அண்ணாசிலை முன் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராமசாமி(இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் தலைமையிலும், லால்குடி ரவுண்டானா அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பசுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story