தோகைமலை அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை பட்டா மாற்றம் செய்த வாலிபர் கைது


தோகைமலை அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை பட்டா மாற்றம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 9:29 AM IST (Updated: 10 Jun 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை பட்டா மாற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை, 

தோகைமலை அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை பட்டா மாற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போலி ஆவணங்கள் மூலம் பதிவு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மேலவாளியம்பட்டியை சேர்ந்தவர் தொப்பாநாயக்கர் மகள் பொம்மக்கா. இவருக்கு பாப்பம்மாள் என்ற அக்காவும், பெரிய பொம்மாநாயக்கர் என்ற சகோதரரும் உள்ளனர். இவர்களுக்கு அதேபகுதியில் சுமார் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பொம்மக்காவுக்கும், பாப்பம்மாளுக்கும் திருமணமாகி திண்டுக்கல் மாவட்டம், அப்பிநாயக்கனூரில் வசித்து வந்துள்ளனர். கடந்த 1984-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பெரிய பொம்மாநாயக்கர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.

இந்தநிலையில், மேலவாளிம்பட்டியை சேர்ந்த சீலாநாயக்கர் என்பவரது மகன் பாக்கியராஜ் (வயது 35), பெரியபொம்மாநாயக்கர் பெயரில், போலி ஆவணங்கள் தயார் செய்து அவரது பெயரை தனது குடும்ப அட்டையில் 2011-ம் ஆண்டு சேர்த்துள்ளார். பின்னர் போலி ஆவணங்கள் தயார் செய்து, பொம்மக்கா, பாப்பம்மாள், பெரியபொம்மாநாயக்கர் ஆகியோருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தனது பெயரில் பாக்கியராஜ் மாற்றி நிலத்திற்கு பட்டா பெற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மக்கா கடந்த 2013-ம் ஆண்டில் அப்போதிருந்த கரூர் மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

வாலிபர் கைது

இதுகுறித்து விசாரித்த அப்போதிருந்த குளித்தலை கோட்டாட்சியர், போலியாக தனது பெயரில் நிலத்தை பட்டா செய்து மாற்றிக்கொண்ட பாக்கியராஜின் பட்டாவை கடந்த 27.12.2013 அன்று ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும், போலியாக ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரித்த பாக்கியராஜின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், இதுதொடர்பாக பொம்மக்கா ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில், தோகைமலை போலீசார் இதுகுறித்து கடந்த ஆண்டு வழக்குப்பதிந்தனர்.

இந்த வழக்கு குறித்து தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், பாக்கியராஜ் போலியான ஆவணங்கள் தயாரித்து, வட்டாட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் முத்திரை மற்றும் கையெழுத்துகளை போட்டு தனது பெயரியில் பட்டா மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து தோகைமலை போலீசார் நேற்று முன்தினம் பாக்கியராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story