கந்தர்வகோட்டை சிறுமி நரபலி சம்பவம்: பெண் மந்திரவாதியின் உதவியாளரும் கைது
கந்தர்வகோட்டை சிறுமி நரபலி சம்பவத்தில் பெண் மந்திரவாதியின் உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை,
கந்தர்வகோட்டை சிறுமி நரபலி சம்பவத்தில் பெண் மந்திரவாதியின் உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.
சிறுமி நரபலி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீரின் மகள் வித்யா (வயது 13). இவள் அங்குள்ள தைல மரக்காட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வித்யாவை பன்னீர் நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பன்னீரும், அவரது உறவினர் குமாரும் கைது செய்யப்பட்டனர். மேலும் நரபலி கொடுக்க ஆலோசனை வழங்கிய புதுக்கோட்டையை சேர்ந்த மந்திரவாதியான வசந்தியை (46) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
உதவியாளர் கைது
கைதான வசந்தி, சிறுமியை நரபலி கொடுப்பதற்காக நொடியூர் அருகே தைல மரக்காட்டில் பூஜை நடத்தியதையும், தான் செய்து வந்த மாந்திரீக தொழில் பற்றியும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். கைதான அவரை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மந்திரவாதிக்கு உதவியாக இருந்த மின்னாத்தூரை சேர்ந்த முருகாயியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் பன்னீரின் 2-வது மனைவியான வடுதாவயலை சேர்ந்த மூக்காயி கடந்த 30-ந் தேதி திடீரென இறந்தார். இது தொடர்பாக உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சிறுமி நரபலி சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story