ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு மாறிய விழுப்புரம்


ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு மாறிய விழுப்புரம்
x
தினத்தந்தி 10 Jun 2020 10:35 AM IST (Updated: 10 Jun 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு விழுப்புரம் மாறியுள்ளது.

விழுப்புரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்போது 5-ம் கட்டமாக இம்மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா நோயினால் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-க்கு மேல் இருந்தால் அந்த மாவட்டத்தை சிவப்பு மண்டலமாகவும், 50 பேருக்கு குறைவாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அம்மாவட்டத்தை ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டத்தை பச்சை மண்டலமாகவும் என 3 வகைகளாக பிரித்து தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியன்று டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 3 பேருக்கு முதலாவதாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் 50 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் 48 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் பிறகு சில நாட்களாக கொரோனா நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்தது. அதன் பிறகு சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த சிறு வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அவர்களில் பலருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் ஆரஞ்சு மண்டலத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே நீடித்த விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்கு மாறியது. தொடர்ந்து, கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.

மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி நிலவரப்படி கொரோனாவால் 308 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து 272 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதால் மீதமுள்ள 34 பேர் மட்டும் சிகிச்சையில் இருந்தனர். இதன் அடிப்படையில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது. இவர்களில் சிலர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த மாதம் 23-ந் தேதி நிலவரப்படி 21 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் மீதமுள்ளவர்களும் குணமடைந்து படிப்படியாக நோய் பாதிப்பு குறைந்து விழுப்புரம் மாவட்டம், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்திற்கு மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பீகார், மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தவர்களால் மீண்டும் நோய் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை இந்நோயால் 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 329 பேர் நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 52 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்தபோதிலும் தற்போது 52 பேர் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 3 வாரங்களாக ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து வந்த விழுப்புரம் மாவட்டம் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளது.

Next Story