நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்


நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 10 Jun 2020 5:37 AM GMT (Updated: 2020-06-10T11:07:16+05:30)

கடன் தவணை தொகையை உடனடியாக செலுத்துமாறு தொந்தரவு செய்யும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமாக சில வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி உள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் முதல் ஆகஸ்டு வரை 6 மாதங்கள் கடன் தவணை தொகைகளை செலுத்துவதற்கு மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால் திருப்பூரில் சில நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகையை செலுத்துமாறு கடன் வாங்கியவர்களிடம் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கூறி தகாத வார்த்தையால் பேசுவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி ஆகியோர் தலைமையில் கடன் தவணை தொகையை உடனடியாக செலுத்துமாறு தொந்தரவு செய்யும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பான புகார் மனுவை போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காலஅவகாசம்

ராக்கியாபாளையம் பகுதியில் வசித்து வரும் நாங்கள் எங்கள் குடும்ப சூழல் காரணமாக மகளிர் சுயஉதவி குழு மூலமாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி இருந்தோம். கொரோனா தொற்று நோய் காரணமாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் வேலையின்றி தவித்து வருகிறோம். இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் பணத்தை உடனடியாக செலுத்துமாறு நேரடியாகவும், போன் மூலமாகவும் எங்களை தொந்தரவு செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது.

எனவே நாங்கள் வாங்கிய கடன் தொகையை நிதிநிறுவனங்களுக்கு திருப்பி செலுத்த 30.8.2020 வரை கால அவகாசம் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்றும் நிதிநிறுவன ஊழியர்களிடம் போலீசார் தெரிவித்தனர். மேலும் நிதிநிறுவனங்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி கூறி உள்ள வட்டி தொடர்பான விவரங்களை வாங்கி போலீசார் பொதுமக்களிடம் கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story