பெரம்பலூரில் ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு நிவாரணம் கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு நிவாரணம் கேட்டு பெரம்பலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு நிவாரணம் கேட்டு ஜெயங்கொண்டம், பெரம்பலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகள்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிப்புகளுக்குள்ளான ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு மாதம் ரூ.7 ஆயிரத்து 500-ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் நிதி வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாக 6 மாதங்களுக்கு முறைகேடுகள் இல்லாமல் வழங்க வேண்டும்.
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும். சிறு, குறு நடுத்தர தொழில் பாதிப்புக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வங்கி மற்றும் தனியார் நிதிநிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு 6 மாத வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு 2020 மின்சார சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது. மருத்துவ படிப்பில் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பெரம்பலூரில்...
இதேபோல் பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இடதுசாரி தோழமை இயக்கங்கள் சார்பில் பாலக்கரை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ஏ.ஐ.டி.யூ.சி. முன்னாள் மாநில பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் அனைத்து துறை ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கம், ஆட்டோ தொழிற்சங்கங்கள், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story