10-ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்


10-ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்
x
தினத்தந்தி 10 Jun 2020 11:37 AM IST (Updated: 10 Jun 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். 

கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கையில் பதாகைகளை ஏந்தி நன்றி தெரிவித்தனர். 

மேலும் தமிழக அரசு 80 மதிப்பெண்கள் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையிலும், 20 மதிப்பெண்கள் வருகைப்பதிவு அடிப்படையிலும் வழங்கி அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்தனர். 

மேலும் பெற்றோர்கள் கூறுகையில், எங்களது பிள்ளைகள் எப்படி தேர்வு எழுத போகிறது என பல நாட்களாக தூக்கம் வராமல் தவித்தோம். தமிழக அரசு பல நாள் கேள்விக்கு விடை கொடுத்து எங்கள் வயிற்றில் பாலை வார்த்து விட்டது என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தேர்வு நுழைவுச்சீட்டு வாங்க காத்திருந்த மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் மகிழ்ந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

Next Story