முதல்-மந்திரிக்கு மீண்டும் கடிதம் எழுதுவேன் எனது பதவி ஏற்பு நிகழ்ச்சியை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை டி.கே.சிவக்குமார் பேட்டி
“எனது பதவி ஏற்பு நிகழ்ச்சியை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை” என்றும், இது தொடர்பாக முதல்- மந்திரிக்கு மீண்டும் கடிதம் எழுதவேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
“எனது பதவி ஏற்பு நிகழ்ச்சியை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை” என்றும், இது தொடர்பாக முதல்- மந்திரிக்கு மீண்டும் கடிதம் எழுதவேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
“கர்நாடக காங்கிரஸ் தலைவராக நான் நியமிக்கப்பட்டு உள்ளேன். எங்கள் கட்சியில் புதிய தலைவர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி பகிரங்கமாக நடத்தப்படுவது வழக்கம். கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் தலைவருக்கு மரியாதை அளித்து, அவரிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொள்வது நடந்து வருகிறது.
அதன்படியே நான் எங்கள் கட்சி தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு கடந்த 7-ந் தேதி அனுமதி வழங்குமாறு கேட்டேன். ஊரடங்கு அமலில் உள்ளதால், அனுமதி வழங்க முடியாது என்று அரசு கூறிவிட்டது. அதன் பிறகு 14-ந் தேதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு மாநில அரசிடம் கேட்டேன். ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளதால், இப்போதும் அனுமதி வழங்க முடியாது என்று அரசு கூறிவிட்டது.
தனிமனித விலகல்
எனது பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அரசு தொடர்ந்து குறுக்கீடு செய்து வருகிறது. நானே முதல்-மந்திரி எடியூரப்பாவை தொடர்பு கொண்டு அனுமதி கேட்டேன். அவர் வாய்மொழியாக கூறியதையடுத்து 14-ந் தேதி பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தோம். எனது பதவி ஏற்பு நிகழ்ச்சியை சுமார் 7 ஆயிரம் இடங்களில் மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல இடங்களில் தொலைக்காட்சி பெட்டிகளை தயார்படுத்தி வைத்துள்ளோம். அரசுக்கு கன்னடத்துடன் ஆங்கிலத்திலும் கடிதம் எழுதினேன். இந்த நிகழ்ச்சியில் 150 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று நான் உறுதி மொழி கொடுத்துள்ளேன். தனிமனித விலகலை பின்பற்றி நிகழ்ச்சியை நடத்துவதாகவும் கூறினேன்.
மீண்டும் கடிதம்
எடியூரப்பா சொன்னபடி நடந்து கொள்வார், அரசியல் செய்ய மாட்டார் என்று நான் நினைத்தேன். இந்த விஷயத்தில் யார்-யார்? என்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும். அவர்கள் எனது சகோதரர்கள். ஜனநாயகத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி வரலாற்றில் இடம் பெறக்கூடியது. நாங்கள் விதான சவுதாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினோம். அதற்கும் அனுமதி வழங்கவில்லை.
திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சியில் 20 பேருக்கும் அனுமதி வழங்குவதாக அரசு சொல்கிறது. எனது பதவி ஏற்பு நிகழ்ச்சியை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. முதல்-மந்திரிக்கு மீண்டும் கடிதம் எழுதுகிறேன். ஊடகத்தினரை சட்டசபை கூட்டத்தில் அனுமதிக்கவில்லை. முதல்-மந்திரியின் வீட்டு வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பிவிட்டனர். ஆனால் நீங்கள் குரல் எழுப்பவில்லை. ஊடகம், ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.”
மக்களின் குரலாக...
நான் வீட்டில் அமைதியாக உட்காரும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடக மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். கொரோனா விஷயத்தில் அரசு வழங்கிய நிவாரண உதவி மக்களுக்கு கிடைத்ததா? என்பது குறித்து அவர்களை சந்தித்து கேட்டு அறிய உள்ளேன். மக்களின் குரலாக நான் பணியாற்றுவேன்.”
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story