கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூருவில் பாதிப்பு அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 120 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 120 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூருவில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேலும் 3 பேர் பலி
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 5,853 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 120 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5,973 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 2,862 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 257 பேர் அடங்குவர். 3,108 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதாவது தார்வாரை சேர்ந்த 58 வயது நபர், பெங்களூரு நகரை சேர்ந்த 32 வயது இளைஞர், 57 வயது நபர் ஆகிய 3 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
மாதிரிகள் பரிசோதனை
புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூருவில் 42 பேர், யாதகிரியில் 27 பேர், விஜயாப்புராவில் 13 பேர், கலபுரகியில் 11 பேர், பீதரில் 5 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், தார்வாரில் 4 பேர், தாவணகெரே, ஹாசன், பல்லாரி ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், பாகல்கோட்டை, ராமநகரில் தலா 2 பேர், பெலகாவியில் ஒருவர் உள்ளனர்.
கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 506 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 249 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மாநிலத்தில் 44 ஆயிரத்து 160 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் பாதிப்பு அதிகரிப்பு
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. மரண விகிதம் என்பது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது நகரவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவில் பார்க்கும்போது கடந்த 2 நாட்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது, மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story