நாட்டின் வளர்ச்சியில் பிராமண சமூகத்தின் பங்கு அளப்பரியது முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
நாட்டின் வளர்ச்சியில் பிராமண சமூகத்தின் பங்கு அளப்பரியது என்று முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.
பெங்களூரு,
நாட்டின் வளர்ச்சியில் பிராமண சமூகத்தின் பங்கு அளப்பரியது என்று முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.
முன்னேறிய சமூகம்
பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பிராமணர் மேம்பாட்டு வாரிய தொடக்க விழா மற்றும் சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, சின்னத்தை வெளியிட்டு பேசும்போது கூறியதாவது:-
பாரம்பரியமாக பிரமாணர் சமூகம், முன்னேறிய சமூகம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் உள்ளனர். அத்தகையவர்களுக்கு உதவுவதற்காக இந்த வாரியம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் பிராமண சமூகத்தின் பங்களிப்பு அளப்பரியது.
முழுமையான வளர்ச்சி
குறிப்பாக கல்வி மற்றும் கலாசாரத்தை காப்பதில் இந்த சமூகம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
இந்த சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு மற்றும் பரம்பரையை கொண்டுள்ளது. இந்த சமூகம் கல்வி உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்தும் அளிக்கிறது. இந்த பிராமணர் மேம்பாட்டு வாரியம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிராமணர்களை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி, தொழிற்பயிற்சி, சுயதொழில், போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி, மாணவர்களுக்கு உறைவிட வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. கூட்டு திருமணம், விளையாட்டில் சாதிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்றவையும் வழங்கப்படுகிறது. இதை பிராமணர் சமூகம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பிராமணரின் முழுமையான வளர்ச்சிக்கு அரசு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த விழாவில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பிராமணர் மேம்பாட்டு வாரிய தலைவர் சச்சிதானந்தமூர்த்தி, மந்திரிகள் ஆர்.அசோக், ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் தேஜஸ்விசூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story