டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு: எடியூரப்பா அரங்கேற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் சித்தராமையா கடும் தாக்கு


டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு: எடியூரப்பா அரங்கேற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 11 Jun 2020 4:21 AM IST (Updated: 11 Jun 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது எடியூரப்பா அரங்கேற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று சித்தராமையா கூறினார்.

மைசூரு, 

டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது எடியூரப்பா அரங்கேற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று சித்தராமையா கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா நேற்று மைசூருவுக்கு வந்தார். மைசூரு ரெயில் நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு மாநில பா.ஜனதா அரசு அனுமதி வழங்காமல் கீழ்த்தரமான அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் கர்நாடக காங்கிரஸ் தலைவராக நியமித்து 3 மாதங்கள் ஆகிவிட்டது.

பதவி ஏற்பு விழா

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவை நடத்த முடியவில்லை. ஆனால் தற்போது கர்நாடக மாநிலம் வைரஸ் தொற்றில் இருந்து ஓரளவிற்கு சுதாரித்துக் கொண்டுள்ளது. கொரோனா நோய் தொற்று இல்லாததால் மைசூருவில் டி.கே.சிவக்குமாரின் பதவி ஏற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து வாய்மொழியாக அனுமதி கேட்டிருந்தோம்.

அதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி அளிப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். பிறகு அரசிடம் கடிதம் மூலமாக அனுமதி கேட்டதற்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்காமல் முதல்-மந்திரி நிராகரித்துள்ளார். இது முதல்-மந்திரி எடியூரப்பா அரங்கேற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் அல்லவா?. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஒரு சட்டம். நமக்கு ஒரு சட்டமா?.

வேட்பாளர்கள் தேர்வு

கொரோனா பாதிப்பு இருப்பதால் நாங்கள் சமூக விலகலை கடைப்பிடித்து, கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருந்தோம். காங்கிரசார் தங்களது கட்சியை வலுப்படுத்திக் கொள்வார்கள் என்ற ஆதங்கத்தால் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு இதுபோன்ற கீழ்த்தரமான செயலை செய்துள்ளது. மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த வேண்டும்.

தேர்வை நடத்துவதற்கு முன்பு கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த வேண்டாம் என்று சொல்வது சரியல்ல. பள்ளி-கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை குறைப்பது பற்றி அரசு பரிசீலனை நடத்தி முடிவெடுக்க வேண்டும். மைசூரு டவுனில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story