புதுவையில் கொரோனா தொற்று விதிமீறல்: ஒரே நாளில் ரூ.7,300 அபராதம்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி
புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி மேட்டுப்பாளையம் பால்வாடி வீதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
புதுவை மாநிலத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 3,499 வழக்குகளும், 16,493 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று விதி மீறலுக்காக புதுவை, உழவர்கரை நகராட்சிகள், அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களில் ரூ.7,300 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.