மார்க்கெட் வீதிகளில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு ; முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவு


மார்க்கெட் வீதிகளில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு ; முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2020 4:57 AM IST (Updated: 11 Jun 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மார்க்கெட் வீதிகளில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வியாபாரிகள், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு காய்கறி கடைகள் மாற்றப்பட்டன. அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் அரசின் இதுதொடர்பான உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்பட்டன.

இதுகுறித்து கவர்னர் மாளிகைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கவர்னர் கிரண்பெடி நேற்று மகாத்மா காந்தி வீதி, கொசக்கடை வீதி, புஸ்சி வீதிகளில் காரில் இருந்தபடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பெரிய மார்க்கெட் பகுதியில் அரசின் உத்தரவுகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதை பார்த்த கவர்னர் கிரண்பெடி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து சமூக இடைவெளியை பின்பற்றாத கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று வியாபாரிகளிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று எச்சரித்தனர். அங்கு முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர். பின்னர் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

முன்னதாக நேற்று காலை பெரிய மார்க்கெட் பகுதியில் போலீஸ் ஐ.ஜி.சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பழக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. உடனே அவர்கள் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அந்த பகுதியில் கும்பலாக நின்று இருந்த பொதுமக்களை சமூக இடைவெளி கடைப்பிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

Next Story