சலூன் கடைக்காரர் உள்பட நெல்லை-தூத்துக்குடியில் மேலும் 31 பேருக்கு கொரோனா தென்காசியில் புதிதாக தொற்று இல்லை


சலூன் கடைக்காரர் உள்பட நெல்லை-தூத்துக்குடியில் மேலும் 31 பேருக்கு கொரோனா தென்காசியில் புதிதாக தொற்று இல்லை
x
தினத்தந்தி 11 Jun 2020 12:31 AM GMT (Updated: 2020-06-11T06:01:18+05:30)

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் சலூன் கடைக்காரர் உள்பட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் சலூன் கடைக்காரர் உள்பட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசியில் புதிதாக தொற்று இல்லை.

கொரோனா வைரஸ்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சிலருக்கும் தொற்று பரவி உள்ளது.

நேற்று முன்தினம் வரையிலும் 365 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 பேர் இறந்து உள்ளனர். 264 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

24 பேருக்கு தொற்று

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரிடம் தொடர்பில் இருந்த மற்றும் அங்கு பணியாற்றி வந்த தூத்துக்குடி வள்ளிநாயகிபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரசவ வார்டில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வள்ளிநாயகிபுரம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று சென்னையில் இருந்து இ-பாஸ் மூலம் தூத்துக்குடிக்கு வந்த தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த 9 பேர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட ஒரே நாளில் 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்து உள்ளது.

நெல்லையில் 7 பேர்

மும்பையில் இருந்தும், சென்னையில் இருந்தும் நெல்லைக்கு வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 7 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் நெல்லை சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருபவர், மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர், நாங்குநேரி டோல்கேட்டில் பணியாற்றக்கூடியவர் ஒருவர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேர், அணைந்தபெருமாள்நாடானூரை சேர்ந்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர் ஆவார்.

407 ஆக உயர்வு

இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 407 ஆக அதிகரித்தது. இவர்களில் 352 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்துள்ளார்.

நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சலூன்கடைக்காரர் தனது கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சலூன் கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஓட்டப்பட்டு உள்ளது.

மேலும் இவருடைய வீடு அமைந்துள்ள பகுதியான சிவபுரத்திலும் மாநகராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பகுதி என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசனி தெளித்தனர். மேலும், அவருடைய கடைக்கு முடி திருத்த வந்தவர்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தென்காசியில் தொற்று இல்லை

தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பபட்டவர்களின் எண்ணிக்கை 106 ஆகும். இதில் 88 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story