தூத்துக்குடியில் போலீஸ்காரர் குத்திக்கொலை காவலாளி கைது


தூத்துக்குடியில் போலீஸ்காரர் குத்திக்கொலை காவலாளி கைது
x
தினத்தந்தி 11 Jun 2020 12:50 AM GMT (Updated: 11 Jun 2020 12:50 AM GMT)

தூத்துக்குடியில் போலீஸ்காரர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் போலீஸ்காரர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ்காரர்

தூத்துக்குடியில் உள்ள மத்திய காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் புங்கலிங்கம் (வயது 34). போலீஸ்காரரான இவர் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய குடியிருப்பு பராமரிப்பு பணிகளை கண்காணித்து வந்தார். இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்கா அருகே வந்து கொண்டு இருந்தார்.

அப்போது போலீஸ்காரர் புங்கலிங்கம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பூங்கா அருகே நின்று கொண்டு இருந்த ஆண் ஒருவருக்கும், புங்கலிங்கத்துக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், புங்கலிங்கத்தை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

பின்னர் புங்கலிங்கம் அந்த பகுதியில் மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது புங்கலிங்கம் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் டாக்டர்கள் பரிசோதனையில், புங்கலிங்கத்துக்கு கத்திக்குத்து காயம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

காவலாளி கைது

இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எம்.ஜி.ஆர். பூங்காவில் தனியார் நிறுவன காவலாளியாக பணியாற்றி வந்த தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் திரவியபுரத்தைச் சேர்ந்த செல்வம்(44) என்பவர், போலீஸ்காரர் புங்கலிங்கத்தை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து செல்வத்தை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரர் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

நேற்று மதியம் போலீஸ்காரர் புங்கலிங்கத்தின் உடல், சொந்த ஊரான செக்காரக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த போலீஸ்காரர் புங்கலிங்கத்துக்கு காசியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தூத்துக்குடியில் போலீஸ்காரர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story