ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா: கண்ணன்விளை கிராமம் ‘சீல்’ வைத்து தீவிர கண்காணிப்பு மீண்டும் தொற்று ஊருக்குள் பரவியதால் மக்கள் அச்சம்


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா: கண்ணன்விளை கிராமம் ‘சீல்’ வைத்து தீவிர கண்காணிப்பு மீண்டும் தொற்று ஊருக்குள் பரவியதால் மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 11 Jun 2020 2:12 AM GMT (Updated: 2020-06-11T07:42:03+05:30)

கருங்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கண்ணன்விளை கிராமம் ‘சீல்‘ வைக்கப்பட்டது.

கருங்கல், 

கருங்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கண்ணன்விளை கிராமம் ‘சீல்‘ வைக்கப்பட்டது. மீண்டும் கொரோனா ஊருக்குள் பரவியதால் குமரி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் செந்தறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டர் ஆகவும் பணியாற்றியதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிக்காக சமீபத்தில் அவர் களியக்காவிளை சோதனைச்சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கொரோனா அறிகுறியுடன் வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்ட போது, கொரோனா பாதித்த நபர் மூலமாக அவருக்கு பரவி இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமத்துக்கு ‘சீல்‘ வைப்பு

இதனை தொடர்ந்து அவருடன் இருந்த தந்தை, மனைவி, மகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் கண்ணன்விளை கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்‘ வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டனர். கிருமிநாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சீல் வைக்கப்பட்ட கண்ணன்விளை கிராமத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்ட 4 பேருடன் தொடர்பில் இருந்த அந்த பகுதியை சேர்ந்தவர்களின் விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து, சளி மாதிரி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கண்ணன்விளை பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பதால் வெளிநபர்கள் யாரும் உள்ளே வரவும், உள்ளூர் நபர்கள் வெளியே செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

நிவாரணம்

கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊரான பஞ்சலிங்கபுரத்துக்கு வந்து உள்ளார். அவருக்கு ரெயில் நிலையத்தில் சளி மாதிரி, ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பெண் தங்கி இருந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த 30 குடும்பத்தினருக்கும், ஆஸ்டின் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து தலா 5 கிலோ அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் காமராஜ், கிளை செயலாளர் சுந்தரம், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மீண்டும் அச்சம்

குமரி மாவட்டத்தில் சென்னை உள்பட வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அவ்வாறு வரும் நபர்கள் அனைவரையும் குமரி எல்லையிலேயே தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை நடத்தி, முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தால் வீடுகளுக்கும், கொரோனா பாதிப்பு என தெரியவந்தால் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கையால், குமரி மாவட்டத்தின் உள் பகுதிக்குள் கொரோனா பரவாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவருடைய குடும்பத்தினருக்கும் பாதிப்பு உருவாகி, ஊருக்குள் மீண்டும் தொற்று பரவிய சம்பவம் குமரி மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story