திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்களும் இயங்க தொடங்கின பரிசோதனைக்கு பிறகே பயணிகளுக்கு அனுமதி


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்களும் இயங்க தொடங்கின  பரிசோதனைக்கு பிறகே பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 11 Jun 2020 7:44 AM IST (Updated: 11 Jun 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் நேற்று முதல் 60 சதவீதம் தனியார் பஸ்களும் இயங்க தொடங்கின. ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பயணிகள் பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல், 

கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் பொதுப்போக்குவரத்தில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டு, தமிழகத்தில் குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழகத்தில் நேற்று முதல் தனியார் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தனியார் பஸ்கள்

அதன்படி திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை, சாணார்பட்டி, மதுரை, வாடிப்பட்டி, பழனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு நேற்று தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சியடைந்த பயணிகள் தனியார் பஸ்களில் நேற்று ஆனந்தமாக பயணம் செய்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 235 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்களை இயக்குவதில் அரசு அறிவித்த வழிமுறைப்படி பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீதம் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

பரிசோதனை

இதில் திண்டுக்கல் நகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் 22 பேர், மதுரை, பழனி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் 33 பேர் என அரசு நிர்ணயம் செய்த அளவிலேயே பயணிகளை அனுமதித்தோம். முன்னதாக தனியார் பஸ்களின் இருக்கைகள், பஸ்களின் டயர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்திய பின்னரே திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு பஸ்களை கொண்டுவந்தோம். மேலும் பயணிகளுக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை செய்துவிட்டு, அவர்களின் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி மருந்து வழங்கினோம். முக கவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே பஸ்களில் பயணிக்க அனுமதித்தோம். அதேபோல் டிரைவர், கண்டக்டர்களுக்கும் முக கவசம், கையுறை அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சப்-கலெக்டர் ஆய்வு

இதற்கிடையே பழனி பஸ் நிலையத்தில் சப்-கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது தனியார் பஸ்களில் அரசு விதித்த வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறதா? என்றும், பஸ்களில் பயணிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்கிறார்களா? என்றும் ஆய்வு செய்தார்.

Next Story