நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் 36 பேர் கைது


நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் 36 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2020 2:23 AM GMT (Updated: 11 Jun 2020 2:23 AM GMT)

நாகர்கோவிலில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

சட்டநகல் எரிப்பு போராட்டம்

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக திருத்தம் செய்து அவசர சட்டம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டிப்பதாகக்கூறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நாடு தழுவிய சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்டக் கிளை சார்பிலும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க குமரி மாவட்டக்கிளை சார்பிலும் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். தலைவர் சைமன் சைலஸ், துணைத்தலைவர் முருகேசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் உஷா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, நிர்வாகிகள் ஆறுமுகம் பிள்ளை, விஜி, சின்னத்தம்பி, ராமச்சந்திரன், மணிகண்டன், பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தள்ளு, முள்ளு

இந்த போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதோடு, மத்திய அரசின் திருத்தச் சட்ட நகல்களை கிழித்து எரிக்க முயன்றனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மாதிரி சட்ட நகல்களை அவர்களிடம் இருந்து பறித்தனர். அப்போது போலீசாருக்கும், விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கைது

பின்னர், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி 5 பெண்கள் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட சேகர் தலைமையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மொத்தத்தில் 2 இடங்களிலும் சேர்த்து 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story