போலீஸ் அதிகாரி திருமண விழாவில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு மண்டபத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்


போலீஸ் அதிகாரி திருமண விழாவில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு மண்டபத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்
x
தினத்தந்தி 11 Jun 2020 8:01 AM IST (Updated: 11 Jun 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஊரடங்கு விதிகளை மீறி போலீஸ் அதிகாரி திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் ஊரடங்கு விதிகளை மீறி போலீஸ் அதிகாரி திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

திருமண நிகழ்ச்சி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்த 5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழகத்திலும் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூட கூடாது என்று அரசு அறிவித்திருக்கிறது. மேலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. அதோடு திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மிகவும் குறைவான அளவே மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசின் உத்தரவை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டமாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டபத்துக்கு பூட்டு

எனவே இதுபற்றி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின் பேரில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சத்யராஜ் மற்றும் அதிகாரிகள் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த மண்டபத்தில் அரசின் விதிகளை மீறி 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். முன்னதாக மண்டபத்தில் திரண்டிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

கொரோனா பரிசோதனை

பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மணமகன் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதும் திருமணத்துக்காக சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சளி மற்றும் ரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டன. திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story