குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை கண்டித்த மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை கண்டித்த மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி,
குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை கண்டித்த மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கூப்புளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மீனாம்பாள்(வயது 70). இவரது கணவர் இறந்து விட்டதால் மீனாம்பாள் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இவரது கடைசி மகள் விமலா என்பவரை பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தியை சேர்ந்த துரைராஜ்(44 )என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். பேராவூரணியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்த துரைராஜ் கடந்த ஒரு வாரமாக மாமியார் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
குடித்து விட்டு வந்ததால் கண்டிப்பு
துரைராஜுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் மாலை மீனாம்பாள் துரைராஜிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வர சொல்லி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து சென்ற துரைராஜ் பொருட்களை வாங்காமல் இரவு குடி போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரிடம் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தில் இப்படி குடித்து விட்டு வந்தால் எப்படி? என்று கேட்டு துரைராஜை மீனாம்பாள் கண்டித்துள்ளார்.
வெட்டிக்கொலை
ஏற்கனவே நல்ல குடிபோதையில் இருந்த துரைராஜுக்கு மாமியார் தன்னை கண்டித்தது பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மீனாம்பாளை கழுத்து, கை, கால் போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுப்பட்ட மீனாம்பாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், பேராவூரணி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
கைது
இது குறித்து பேராவூரணி போலீசில் மீனாம்பாள் மகள் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story