கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்


கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2020 8:36 AM IST (Updated: 11 Jun 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோவில்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழக அரசு கோவில்களை திறக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன்பு ஒற்றைக்காலில் நின்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் மொத்தம் 20 இடங்களில் இந்து முன்னணி நிர்வாகிகள், ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தேனியில் சோலைமலை அய்யனார் கோவில், சந்தை மாரியம்மன் கோவில், வீரப்ப அய்யனார் கோவில் ஆகிய கோவில்கள் முன்பு இந்து முன்னணி நிர்வாகிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுபோல், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவில், மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில், ஆண்டிப்பட்டி மீனாட்சியம்மன் கோவில், ஜம்புலிப்புத்தூர் கதிலி நரசிங்கபெருமாள் கோவில், தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் கோவில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், கம்பம் கவுமாரியம்மன் கோவில், கம்பராயப்பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியகுளத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமையிலும், தேவதானப்பட்டியில் மாவட்ட செயலாளர் உமையராஜ் தலைமையிலும், தெப்பம்பட்டியில் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்ற பகுதிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது கோவில்களை திறக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story