தர்மபுரி மாவட்டத்திற்குள் இ-பாஸ் வாங்காமல் இருசக்கர வாகனத்தில் வருவோர், நடந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை


தர்மபுரி மாவட்டத்திற்குள் இ-பாஸ் வாங்காமல் இருசக்கர வாகனத்தில் வருவோர், நடந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2020 8:57 AM IST (Updated: 11 Jun 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் வாங்காமல் இருசக்கர வாகனங்களில் தர்மபுரி மாவட்டத்திற்குள் வருவோர், நடந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவர்களை சோதனைச்சாவடிகளில் இருந்து செட்டிகரையில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட வேண்டும். வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க 50 பேர் கொண்ட குழு அமைத்து கிராம ஊராட்சிகளில் பயிற்சி கொடுக்க வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொண்டு என்னென்ன? நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது குறித்து தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் வாங்காமல் இருசக்கர வாகனங்களில் வருவோர், நடந்து வருவோரை கண்டுபிடித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமங்களில் புதிதாக வருபவர்களை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க ஒரு குழு அமைக்க வேண்டும். ஊரக வேலை உறுதிதிட்டத்தில் பணிபுரிவோரை பயன்படுத்தி கிராமங்களுக்கு புதிதாக வந்தவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். கொரோனா நோய்தொற்று அதிகம் உள்ள சென்னை, காஞ்சீபுரம் செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களிருந்து வருபவர்களை கண்டறிந்து தனிக்கவனம் செலுத்த வேண்டும். தர்மபுரி மாவட்ட எல்லைகளில் உள்ள 10 சோதனைச்சாவடிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 53 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் காவல் துறை மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

இந்த கூட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, சிறப்பு மருத்துவ அலுவலர் சீனிவாசராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாராணி, உதவி கலெக்டர் (பொறுப்பு) தணிகாசலம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மற்றும் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story