கொரோனா எதிரொலி: 7 அட்டைப் பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்யும் புதிய முறை திருச்சி கோர்ட்டில் அமலுக்கு வந்தது


கொரோனா எதிரொலி: 7 அட்டைப் பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்யும் புதிய முறை திருச்சி கோர்ட்டில் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 11 Jun 2020 9:30 AM IST (Updated: 11 Jun 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி கோர்ட்டில் 7 அட்டைப்பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்யும் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.

திருச்சி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி கோர்ட்டில் 7 அட்டைப்பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்யும் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.

மூடப்பட்ட கோர்ட்டுகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் மூடப்பட்டன. அவசர அவசியம் கருதி சென்னை ஐகோர்ட்டில் முக்கியமான வழக்குகளை மட்டும் நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் நடத்தி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள். முன்ஜாமீன், ஜாமீன் தொடர்பான வழக்குகள் இணையதளம் மூலமும் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்ட கோர்ட்டுகளை பொறுத்தவரை குறைந்த அளவிலான ஊழியர்களுடன் அலுவலக பணிகள் மட்டும் நடந்து வந்தன. இந்நிலையில் மாவட்ட கோர்ட்டுகளில் ஜூன் 10-ந் தேதி முதல் வழக்குகளை பெட்டிகளில் தாக்கல் செய்யும் புதிய முறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

7 அட்டைப்பெட்டிகள்

இதன்அடிப்படையில், திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள நான்காவது கூடுதல் சப்-கோர்ட்டு அறையின் முன்பகுதியில் 7 அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் 7 பெட்டிகளிலும் எந்தெந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டிய வழக்கு தொடர்பான மனுக்களை போடவேண்டும் என்ற துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு உள்ளது.

இதன்படி திருச்சி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு, முதலாவது, இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு வழக்கு தொடர்பான மனுக்களை முதல் பெட்டியிலும், குடும்பநல கோர்ட்டு, தொழிலாளர் மற்றும் மகிளா கோர்ட்டு வழக்கினை இரண்டாவது பெட்டியிலும், முதன்மை சப்-கோர்ட்டு, கூடுதல் சப்-கோர்ட்டுகளுக்கு மூன்றாவது பெட்டியிலும், மோட்டார் வாகன விபத்துக்கு நான்காவது பெட்டியிலும், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு மற்றும் அனைத்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளுக்கு ஐந்தாவது பெட்டியிலும், மாவட்ட முன்சீப் மற்றும் கூடுதல் முன்சீப் கோர்ட்டுகளுக்கு ஆறாவது பெட்டியிலும், நகல் எடுப்பது தொடர்பான மனுக்களை ஏழாவது பெட்டியிலும் போடவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீதிபதிகள்

இந்த பெட்டிகளில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனுக்களை போடலாம். 48 மணி நேரம் கழித்து வழக்கு தொடர்பான மனுக்களை சேகரித்து நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்க தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வக்கீல்கள் ஆர்வமுடன் வந்து இந்த பெட்டிகளில் வழக்கு தொடர்பான மனுக்களை தாக்கல் செய்தனர். போலீஸ் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்களையும் இந்த பெட்டிகளில் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் நேரடி யாக மனுக்களை போட அனுமதி இல்லை.

நேற்று நடைபெற்ற இந்த புதிய முறைக்கான தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி முரளிசங்கர், முதலாவது கூடுதல் செசன்சு நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிபதி கிருபாகரன் மதுரம் உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story